பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை


பூத்துக்குலுங்கும் செவ்வந்தி பூக்கள் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:00 AM IST (Updated: 30 Dec 2016 2:11 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி பகுதிகளில் செவ்வந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூக்கள் சாகுபடி பூக்கள் உற்பத்தியில் ‘ஹாலந்து’ என்றழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூ சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக செவ்வந்தி பூ சாகுபடி செய்வது கடந்த காலங்களில் அதிகளவு இருந்தது. கார்த்திகை மாதம் தொ

சின்னாளபட்டி பகுதிகளில் செவ்வந்தி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பூக்கள் சாகுபடி

பூக்கள் உற்பத்தியில் ‘ஹாலந்து’ என்றழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூ சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக செவ்வந்தி பூ சாகுபடி செய்வது கடந்த காலங்களில் அதிகளவு இருந்தது. கார்த்திகை மாதம் தொடங்கும் செவ்வந்திபூக்கள் அறுவடை பணிகள் பொங்கல் வரை நீடிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ செவ்வந்திபூக்கள் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனை ஆனது.

இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. இதையடுத்து செவ்வந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இந்தநிலையில் தற்போது சின்னாளபட்டி, காந்திகிராமம் அண்ணாநகர், அம்மையநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சாமியார்பட்டியை சேர்ந்த பூ விவசாயி ஒருவர் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒரு விவசாய தோட்டத்தில் குறைந்தது 2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை செவ்வந்தி பூக்கள் சாகுபடியில் தான் விவசாயிகள் ஈடுபட்டனர். கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்கள் இந்த பூக்களை வாங்கிச்செல்வார்கள். அதன் பின்னர் தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் செவ்வந்தி பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

வண்ண செவ்வந்தி

பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் செவ்வந்தி பூக்களை திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுகளில் நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்கிறோம். மேலும் ரெயில், லாரிகள் மூலம் சென்னை, தென்காசி, கும்பகோணம், புதுச்சேரி, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு அதிகளவு அனுப்பி விற்பனை செய்தோம்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் பல்வேறு வண்ண செவ்வந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பார்க்க அழகாக தெரிவதால் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இந்த பூக்கள் திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

நஷ்டம்

இதன்காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் செவ்வந்தி பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் பருவமழையும் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பெய்யவில்லை. இதனால் ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தான் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதையடுத்து கூடுதல் விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ரூ.120 வரை விற்பனையான ஒரு கிலோ செவ்வந்தி பூக்கள் தற்போது ரூ.20 முதல் ரூ.30 வரையே மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவை கூட எங்களால் ஈடுசெய்ய முடியவில்லை’ என்றார்.


Next Story