தேனியில் பரபரப்பு: பா.ஜ.க. நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு போலீசார் விசாரணை


தேனியில் பரபரப்பு: பா.ஜ.க. நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 30 Dec 2016 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பா.ஜனதா கட்சி நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீ

தேனியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பா.ஜனதா கட்சி நிர்வாகியின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மோட்டார் சைக்கிளுக்கு தீ

தேனி என்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 46). இவர் தேனி அல்லிநகரம் நகராட்சி 23-வது வார்டு பா.ஜனதா கட்சி பொறுப்பாளராக உள்ளார். இவர் தேனி சுப்பன்தெரு வழியாக செல்லும் பங்களாமேடு திட்டச்சாலை பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் இவர் தனது கணினி மையத்திலேயே தூங்கி விட்டார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த அவருடைய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அவர் தீயை அணைக்க முயற்சிப்பதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து விட்டது. மேலும், அருகில் உள்ள ஒரு டீக்கடையில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை உள்பட சில விளம்பர பலகைகளிலும் தீப்பிடித்து அவையும் எரிந்தன. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அந்த மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் வழக்குப்பதிவு

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் இளங்கோ புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘யாரோ மர்ம நபர்கள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். மோட்டார் சைக்கிளில் குண்டு வைப்பதற்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா? என சந்தேகம் உள்ளது. எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்’ என்றார்.
இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் தான் சமையல் கியாஸ் வினியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் அதற்குரிய குடோன் அமைந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக வேறு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story