ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப வேண்டிய வங்கி பணம் ரூ.23¾ லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது


ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப வேண்டிய வங்கி பணம் ரூ.23¾ லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2016 4:30 AM IST (Updated: 30 Dec 2016 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப வேண்டிய வங்கி பணம் ரூ.23 லட்சத்து 72 ஆயிரத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூ

திருப்பூரில் ஏ.டி.எம். மையத்தில் நிரப்ப வேண்டிய வங்கி பணம் ரூ.23 லட்சத்து 72 ஆயிரத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.23¾ லட்சம் வங்கி பணம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருங்கத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்(வயது 31). இவர் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் திருப்பூர் கிளையில் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் தாமோதரன் வேலை செய்த நிறுவனத்தின் அதிகாரிகள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்பட்ட பணம் குறித்து கடந்த சில வாரங்களாக ஆய்வு செய்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், காங்கேயம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் நிரப்பிய ரூ.23 லட்சத்து 72 ஆயிரத்தை வாடிக்கையாளர்கள் எடுக்காமலேயே மாயமானது தெரியவந்தது.

நிறுவன ஊழியர் கைது

இது குறித்து அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில் தாமோதரன் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தாமோதரன் வங்கிப்பணத்தை கையாடல் செய்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தாமோதரனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் தாமோதரன் பணத்தை நிரப்பிய பின்னர், தனியாக சென்று பணம் நிரப்ப பயன்படுத்தப்படும் ரகசிய கடவு எண்ணை பயன்படுத்தி எந்திரங்களில் வைத்த பணத்தை அவர் மீண்டும் எடுத்து கையாடல் செய்தது தெரியவந்தது. அந்தவகையில் இதுவரை ரூ.23 லட்சத்து 72 ஆயிரம் கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், கையாடல் செய்த பணம் எங்கு உள்ளது, யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தாமோதரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story