சித்தாப்புரா அருகே காபி தோட்ட தொழிலாளியை காட்டு யானை மிதித்து கொன்றது உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்–பரபரப்பு
சித்தாப்புரா அருகே காபி தோட்ட தொழிலாளியை காட்டு யானை மிதித்து கொன்றது. அவரின் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானை கொன்றது குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே உள்ள மால்தாரே கிராமத்தை
குடகு,
சித்தாப்புரா அருகே காபி தோட்ட தொழிலாளியை காட்டு யானை மிதித்து கொன்றது. அவரின் உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை கொன்றதுகுடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே உள்ள மால்தாரே கிராமத்தை சேர்ந்தவர் செலுவா (வயது 36). காபி தோட்ட தொழிலாளி. இவர் ஒட்டரகாடு பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை செலுவா, சக தொழிலாளர்கள் 3 பேருடன் மால்தாரேயில் இருந்து ஒட்டரகாட்டுக்கு வேலைக்கு டிராக்டரில் சென்று கொண்டு இருந்தார்.
டிராக்டர் ஒட்டரகாடு பகுதியில் வந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று டிராக்டர் முன்பாக வந்து நின்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த 4 பேரும் டிராக்டரில் இருந்து இறங்கி வெவ்வேறு திசைகளில் ஓடினர். ஆனால், காட்டு யானை செலுவாவை பின்தொடர்ந்து விரட்டி சென்று, தும்பிக்கையால் அவரை தூக்கி வீசியது. பின்னர் தனது காலால் அவரை மிதித்தது. இதில் செலுவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
உறவினர்கள் போராட்டம்இதுபற்றி தகவல் அறிந்த அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும், சித்தாப்புரா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் செலுவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கிருந்த செலுவாவின் உறவினர்கள், போலீசாரை தடுத்து அவருடைய உடலை எடுக்க விடாமல் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் மற்றும் வனத்துறையினர் செலுவாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது செலுவாவின் உறவினர்கள் அவர்கள், எங்கள் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கூறியும் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறையினரின் அலட்சியத்தால் தற்போது ஒரு உயிர் போய்விட்டது. இதனால் காட்டு யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் பலியான செலுவாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் உறுதிஅவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், எவ்வளவு துரத்தினாலும், அவை மீண்டும், மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. யானைகள் கிராமங்களில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான செலுவாவின் குடும்பத்தினருக்கு அரசிடம் பேசி விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் செலுவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும் சோகம்இந்த சம்பவம் குறித்து சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி காபி தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.