கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கிணற்றில் மூங்கில் கம்புகள், பூமாலைகள் வீச்சு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கிணற்றில் மூங்கில் கம்புகள், பூமாலைகள் கிடந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி சாவு கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (வயது 80) என்பவர் நேற்று முன்தினம் உடல் நலக்குற
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கிணற்றில் மூங்கில் கம்புகள், பூமாலைகள் கிடந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூதாட்டி சாவுகீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்த சின்னம்மாள் (வயது 80) என்பவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் கீக்களூர் செல்லும் சாலையின் உள்புறம் உள்ள சுடுகாட்டில் சின்னம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அடக்கத்திற்கு பின்னர் சின்னம்மாள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு சென்றனர். மர்ம நபர்கள் சிலர் சின்னம்மாள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு வந்த பாடை மூங்கில் கம்புகள் மற்றும் பூமாலைகளை அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த குடிநீர் கிணற்றில் இருந்து மேக்களூர் காலனி, கீக்களூர், கத்தாழம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சாலை மறியல்இந்த நிலையில் நேற்று காலையில் 3 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பம்பு ஆபரேட்டர் முனுசாமி குடிநீர் கிணற்றில் இருந்து மேக்களூர் காலனி மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முற்பட்டார். அப்போது குடிநீர் கிணற்றை பார்த்தபோது, அங்கு பூமாலைகள் மற்றும் மூங்கில் கம்புகள் மிதந்து கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அறிந்த மேக்களூர் காலனி பொதுமக்கள் ஏராளமானோர் குடிநீர் கிணற்றின் அருகே திரண்டனர். சம்பவ இடத்துக்கு கீழ்பென்னாத்தூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். குடிநீர் கிணற்றில் பூமாலைகள், மூங்கில் கம்புகள் வீசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேக்களூர் காலனி பொதுமக்கள் கீக்களூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்புஇதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா கந்தபுனேனி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், தற்போது பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றில் பாடையின் மூங்கில் கம்புகள், பூமாலைகள் கிடப்பதால் தண்ணீர் பயன்படுத்த முடியாது. எனவே, கூடுதல் குடிநீர் கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கூடுதல் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக கீழ்பென்னாத்தூர் – அவலூர்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.