கோவில்பட்டியில் துணிகரம் சித்தா டாக்டர் மீது மயக்கப்பொடி தூவி 3½ பவுன் நகைகள் பறிப்பு குறி சொல்வதாக நாடகமாடி கைவரிசை காட்டிய 2 பேருக்கு வலைவீச்சு


கோவில்பட்டியில் துணிகரம் சித்தா டாக்டர் மீது மயக்கப்பொடி தூவி 3½ பவுன் நகைகள் பறிப்பு குறி சொல்வதாக நாடகமாடி கைவரிசை காட்டிய 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Dec 2016 1:00 AM IST (Updated: 30 Dec 2016 9:29 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குறி சொல்வதாக நாடகமாடி, டாக்டர் மீது மயக்கப்பொடி தூவி 3½ பவுன் நகைகளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் குறி சொல்வதாக நாடகமாடி, டாக்டர் மீது மயக்கப்பொடி தூவி 3½ பவுன் நகைகளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்தா டாக்டர்

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் சுனந்தார். இவருடைய மகன் மசுந்தார் (வயது 46). இவர் சித்தா டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு குறி சொல்வதாக கூறி, குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்த 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மசுந்தாரிடம், உனக்கு நேரம் சரியில்லை, தோ‌ஷம் கழிக்க ரூ.6 ஆயிரம் தருமாறு கூறினர்.

மயக்கப்பொடி தூவினர்

இதற்கு மசுந்தார் மறுப்பு தெரிவித்து, அவர்களை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அந்த 2 மர்மநபர்கள் வெளியேறாமல், விபூதியை மட்டுமாவது வாங்கி கொள்ளுங்கள் என்று மசுந்தாரிடம் கூறியுள்ளனர். எதுவும் வேண்டாம் வெளியே செல்லுங்கள் என கண்டிப்புடன் கூறியபோது, திடீரென்று அந்த 2பேரும் அவர் மீது மயக்கப்பொடி தூவினர். இதனால் சிறிது நேரத்தில் மசுந்தார் மயங்கி விழுந்துள்ளார்.

நகைகள் பறிப்பு


அப்போது மசுந்தார் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க நகையை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனராம். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து மசுந்தார் கண் விழித்து பார்த்தபோது, நகைகள் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் நவநீதன் சம்பவ வீட்டுக்கு சென்று மசுந்தாரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தா டாக்டர் வீடுபுகுந்து மயக்கபொடி தூவி நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story