பணம் கேட்டு வாலிபருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் சீருடைகளுடன் காரில் வந்த 2 பேர் கைது தப்பி ஓடிய 3 பேரும் காரைக்காலை சேர்ந்தவர்கள்
பணம் கேட்டு வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் சீருடைகளுடன் காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரும் காரைக்காலை சேர்ந்தவர்கள். போலீஸ் சீருடைகள் தஞ்சை–திருச்சி பைபாஸ் சாலையில் குறிப்பிட்ட நம்பர் கொண்ட ஒரு கார் அதிவேகமாக செ
தஞ்சாவூர்,
பணம் கேட்டு வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் சீருடைகளுடன் காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரும் காரைக்காலை சேர்ந்தவர்கள்.
போலீஸ் சீருடைகள்தஞ்சை–திருச்சி பைபாஸ் சாலையில் குறிப்பிட்ட நம்பர் கொண்ட ஒரு கார் அதிவேகமாக செல்வதாக தஞ்சை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம்இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டு, அந்த காரை மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் தஞ்சை–பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் சென்ற அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 3 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். மீதமுள்ள 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து, காரில் இருந்து போலீசார் அணியக்கூடிய 2 காக்கி சீருடைகள், போலீஸ் உயர் அதிகாரிகள் அணியக்கூடிய பெல்ட், துப்பாக்கி வைக்கக்கூடிய பவுஜ், 3 லத்திகள், பிளாஸ்டிக் துப்பாக்கி, 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் காரைக்கால் கோவில்பத்து பாரதியார்ரோட்டை சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன்(வயது26), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் சித்தேரியை சேர்ந்த அருண்பிரசாத்(29), தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலகாவேரியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(45) ஆகியோர் என்பதும், இவர்கள் போலீஸ்காரர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இவர்களை தஞ்சை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அருண்பிரசாத்தை காரில் அழைத்து சென்று கத்தியை காட்டி பணம் கேட்டு காரில் வந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்பிரசாத் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
2 பேர் கைதுஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மார்த்தாண்டபூபதி, விருத்தாசலம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய 3 பேரும் காரைக்காலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும், ரூ.2 கோடிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை சிலரிடம் வாங்கி, அவற்றை புதிய நோட்டுகளாக மாற்றி கொடுப்பதற்கு வந்தார்களா? போலீசாரை பார்த்தவுடன் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுடன் தப்பி ஓடினார்களா? என்பது குறித்து தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை பிடித்தால் தான் போலீஸ் சீருடைகள், பிளாஸ்டிக் துப்பாக்கி, லத்திகளை எதற்காக காரில் கொண்டு வந்தார்கள் என்ற விவரம் தெரியவரும்.