போலி ரசீது அச்சடித்து ரூ.5 லட்சம் மோசடி பார்சல் நிறுவன மேலாளர் கைது


போலி ரசீது அச்சடித்து ரூ.5 லட்சம் மோசடி பார்சல் நிறுவன மேலாளர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2016 4:45 AM IST (Updated: 31 Dec 2016 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலி ரசீது அச்சடித்து ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் பார்சல் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார். பார்சல் அலுவலகம் வடஇந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் பார்சல் நிறுவனத்திற்கு கோவை

கோவையில் போலி ரசீது அச்சடித்து ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் பார்சல் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

பார்சல் அலுவலகம்

வடஇந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் பார்சல் நிறுவனத்திற்கு கோவை செல்வபுரம் நாயக்கன்பாளையத்தில் கிளை அலுவலகம் உள்ளது. கோவையில் உள்ள ஜவுளி கடைகளுக்கு வடஇந்தியாவில் உள்ள மில்களில் இருந்து இந்த பார்சல் அலுவலகம் மூலம் துணிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த பார்சல் அலுவலகத்தில் பெரிய தடாகத்தை சேர்ந்த நாகராஜன் (வயது 45) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் பார்சல் அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்த்த போது ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் குறைந்தது தெரியவந்தது. இது குறித்து பார்சல் அலுவலக பொறுப்பாளர் அப்துல்ரசாக் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காளியண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தனியார் நிறுவன மேலாளர் கைது

விசாரணையில் கோவை கிளை மேலாளராக பணியாற்றி வந்த நாகராஜன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பார்சல் டெலிவரி செய்த கடைக்காரர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து விட்டு அதை நிர்வாகத்தின் கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதற்காக நாகராஜன் போலி ரசீது அச்சடித்துள்ளார்.

மேலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் வேலையில் இருந்து நின்று விட்டார். ஆனால் அவருக்கு 6 மாதமாக சம்பளம் கொடுத்ததாக கணக்கு எழுதி அந்த பணத்தையும் நாகராஜன் மோசடி செய்தது தெரியவந்தது. இதன்மூலம் நாகராஜன் மொத்தம் ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் மோசடி செய்து உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாகராஜன் மீது இந்திய தண்டனை சட்டம் 409 (தனியார் நிறுவன ஊழியர் நம்பிக்கை மோசடி செய்தல்), 465 (போலி ஆவணம் தயாரித்தல்), 468 (மோசடி செய்யும் நோக்கத்தில் போலி ஆவணங்களை தயாரித்தல்), 420 (மோசடி) உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் நாகராஜனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story