கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதில் மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி செயல்படுகிறது கலெக்டர் பிரபாகர் தகவல்


கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதில் மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி செயல்படுகிறது கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:30 AM IST (Updated: 31 Dec 2016 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு, கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதில் மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி செயல்படுவதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார். கனிராவுத்தர் குளம் ஈரோட்டிற்கு குடிநீர் ஆதாரமாக கனிராவுத்தர் குளம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக குளத்தின் கரை

ஈரோடு,

கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதில் மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி செயல்படுவதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

கனிராவுத்தர் குளம்

ஈரோட்டிற்கு குடிநீர் ஆதாரமாக கனிராவுத்தர் குளம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக குளத்தின் கரையோரத்திலும், நீர் வழிப்பாதைகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து கனிராவுத்தர் குளத்தின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்தநிலையில் கனிராவுத்தர் குளத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:-
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் விசாரணை நடத்தினார். அப்போது புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் மறு ஆய்வு நடத்தப்பட்டதில் 2 குடிசை வீடுகளும், ஒரு குடியிருப்பின் சுற்றுச்சுவரும் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்பை எடுப்பது தொடர்பாக நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நகர்மயமாக்கம் மூலம் நீர்பிடிப்புக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. நகர் பகுதி விரிவாக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை அகற்றும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடையாது. ஆனால் முறையான திட்ட அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனினும் இந்த கட்டிடத்தில் மேற்கொண்டு எந்தவித கட்டிடத்தையும் கட்டாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

தனியார் நிதி பங்களிப்பு

கனிராவுத்தர் குளத்தை தூர்வாருவதற்கான நிதி கேட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களினால் அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது. இந்தநிலையில் தனியார் நிதி பங்களிப்புடன் குளத்தை தூர்வாருவதற்கான அனைத்து நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டது.

ஆனால் தனியார் நிதியில் குளத்தை தூர்வாரக்கூடாது என்றும், அரசு நிதியுடன் மட்டுமே குளத்தை தூர்வார வேண்டும் என்றும் கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்கத்தினர் எழுத்து பூர்வமாக மனுகொடுத்து உள்ளனர். இதனால் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்க அரசு நிதிக்காக மாநகராட்சி நிர்வாகம் காத்திருக்கிறது. எனவே கனிராவுத்தர் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளத்தை தூர்வாருதல் பணியில் மாவட்ட நிர்வாகம் தொய்வின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

Next Story