தடுப்புச்சுவரில் கார் மோதல்: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தம்பி பேத்தி பலி பூங்கோதை எம்.எல்.ஏ. - உறவினர்கள் கதறல்


தடுப்புச்சுவரில் கார் மோதல்: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தம்பி பேத்தி பலி பூங்கோதை எம்.எல்.ஏ. - உறவினர்கள் கதறல்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:45 AM IST (Updated: 31 Dec 2016 4:05 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை, துவரங்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதியதில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி பேத்தி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து பூங்கோதை எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ஆலடி அருணா உறவினர்கள் சென்னை ஆலவயலில் உள்ள ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 52). இவர்

மணப்பாறை,

துவரங்குறிச்சி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதியதில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி பேத்தி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து பூங்கோதை எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

ஆலடி அருணா உறவினர்கள்

சென்னை ஆலவயலில் உள்ள ஆண்டாள் நகரை சேர்ந்தவர் கலைவாணன்(வயது 52). இவர் சென்னையில் டாக்டராக உள்ளார். மேலும் இவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் மகன். நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து கலைவாணன், அவருடைய மனைவி பாலாம்பிகை(48), மகள்கள் பிரியதர்ஷினி(26), ஆதித்தா(24), பிரியதர்ஷினியின் மகள் அஷ்வைதா(2) ஆகியோர் ஒரு காரில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

பிரியதர்ஷினி சென்னையில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆதித்தாவும் டாக்டர் ஆவார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் நினைவு நாளையொட்டி ஆலங்குளத்தில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களான பிரியதர்ஷினி, ஆதித்தா ஆகியோர் குடும்பத்தினருடன் காரில் சென்றனர்.
தடுப்புச்சுவரில் மோதியது

காரை சென்னை மணலி பகுதியை சேர்ந்த ரமேஷ்(39) ஓட்டினார். சென்னையில் இருந்து திருச்சி வந்ததும் ரமேஷை பக்கத்தில் அமர வைத்து விட்டு, கலைவாணன் காரை ஓட்டினார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே முக்கன்பாலம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் தடுப்புச்சுவரை தாண்டி கவிழ்ந்து உருண்டு சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

பரிதாப சாவு

இதில் காரில் இருந்த பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கலைவாணன், பாலாம்பிகை ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. டிரைவர் உள்பட மற்ற 3 பேரும் காயமின்றி தப்பினர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், விபத்துக்குள்ளான காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பிரியதர்ஷினி உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், பிரியதர்ஷினி உள்ளிட்ட 3 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

எம்.எல்.ஏ. கதறல்

இந்த விபத்து பற்றி பிரியதர்ஷினியின் கணவர் செந்தில் குமார் மற்றும் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் திருச்சிக்கு விரைந்து வந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பிரியதர்ஷினியின் உடலை பார்த்து அவருடைய கணவர் செந்தில்குமார், பூங்கோதை எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று காலை பிரியதர்ஷினியின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story