பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்


பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:25 AM IST (Updated: 31 Dec 2016 4:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயக்கடன் பெறமுடியா

பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயக்கடன் பெறமுடியாமல் அவதி

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு காப்பீடு தொகை ரூ.17,500-ஐ பெற்று கொடுக்க வேண்டும். ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு விவசாய தேவைகளுக்காக வங்கிகளில் குறைந்த அளவே பணம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயக்கடன் முழுவதையும் ஒரே தவணையில் பெற முடியாமல் போகிறது என்றார்.

வறட்சி மாவட்டமாக அறிவித்து...

பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்க தலைவர் டி.கே.ராமலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சாகுபடி பயிர்கள் கருகிவிட்டன. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் பூலாம்பாடி வரதராஜன் பேசுகையில், பூலாம்பாடி நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலக்குணங்குடி, கடம்பூர், பூலாம்பாடி புதூர், அரசடிகாடு, சீனிவாசபுரம், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விளைவித்த பொருட்களை விற்பனை...

மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ரமேஷ் பேசுகையில், குன்னம் தாலுகா ஒகளூர் உள்ளிட்ட பகுதிகளில் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

பெரம்பலூரை சேர்ந்த விவசாயி குமார் பேசுகையில், பெரம்பலூர் உழவர் சந்தையில், உழவர் அல்லாதோர் சிலர் கடை வைத்து காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் எங்களை போன்ற உழவர்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது என்றார்.

கரும்பு நிலுவைத்தொகை

மேலும் கரும்புக்கு மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலை போதாததாக இருக்கிறது. எனவே கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் என பரிந்துரை விலையை மாநில அரசு பரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும். எறையூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் பேசினார். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை துறை துணை இயக்குனர் அய்யாசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story