கார் மீது லாரி மோதியதில் பாட்டி- பேத்தி பலி தாய்-மகன்கள் படுகாயம்


கார் மீது லாரி மோதியதில் பாட்டி- பேத்தி பலி தாய்-மகன்கள் படுகாயம்
x
தினத்தந்தி 31 Dec 2016 4:56 AM IST (Updated: 31 Dec 2016 4:56 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தாய் மற்றும் அவருடைய மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் வந்தனர் திண்டுக்கல் மாவட்டம் வே

கரூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தாய் மற்றும் அவருடைய மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரில் வந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துலுக்காம்பாறையை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மனைவி அமராவதி (வயது 50). இவர்களுடைய மகள் தனலட்சுமி(31). இவரை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். முத்துக்குமார் உடுமலைப்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு நந்தகுமார்(9), தர்னேஷ்குமார்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை உடுமலைப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து தனலட்சுமி தனது மகன்கள் மற்றும் அக்காள் மகள் நிகிலா(11) ஆகியோரை அழைத்துக்கொண்டு கரூர் வெங்கமேட்டில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தார். நிகிலா அமராவதியின் மூத்த மகளுடைய மகள் ஆவாள். காரை தனலட்சுமி ஓட்டினார். வரும் வழியில் வேடசந்தூரில் தனது தாய் அமராவதியையும் காரில் ஏற்றிக்கொண்டு வந்தார்.

பாட்டி- பேத்தி பலி

கரூர் அருகே உள்ள சுக்காலியூர் மேம்பாலத்தில் வந்தபோது, அந்த வழியாக பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்த அமராவதி, நிகிலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நந்தகுமார், தர்னேஷ்குமார் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த தனலட்சுமிக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் நந்தகுமார், தர்னேஷ்குமார் ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அமராவதி, நிகிலா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் சம்பவ இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அமராவதி, நிகிலா ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

Next Story