100 நாள் வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் தர்ணா போராட்டம்


100 நாள் வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:17 AM IST (Updated: 31 Dec 2016 5:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டை வழங்கக்கோரி தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் தஞ்சையை அடுத்த ரா

தஞ்சாவூர்,

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் அடையாள அட்டை வழங்கக்கோரி தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராமமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தஞ்சையை அடுத்த ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 50 பேர் நேற்று தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வாசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அபிமன்னன், துணைச் செயலாளர் ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) சாமிநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட அவர், இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் வேலைக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பேரில் தர்ணா போராட்டத்தை கிராமமக்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, ராஜேந்திரம் கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் வேலைக் கான அடையாள அட்டை 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் வேலையின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தோம். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) சாமிநாதன், ஒரு வாரத்திற்குள் வேலைக்கான அடையாள அட்டை வழங்குவதாக உறுதி அளித்தார். இதனால் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். ஒரு வாரத்திற்குள் அடையாள அட்டை கொடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story