திருவள்ளூர் அருகே பஸ்–லாரி மோதல்; 21 பேர் படுகாயம்


திருவள்ளூர் அருகே பஸ்–லாரி மோதல்; 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Dec 2016 5:33 AM IST (Updated: 31 Dec 2016 5:33 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பஸ்–லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். நேருக்கு நேர் மோதியது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி 35 பணியாளர்களுடன் தனியார் நிறுவன பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவ

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே பஸ்–லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேருக்கு நேர் மோதியது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி 35 பணியாளர்களுடன் தனியார் நிறுவன பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழப்பழண்டை கிராமத்தை சேர்ந்த காண்டீபன்(வயது 32) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார்.

அந்த பஸ் திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கிராவல் மண் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தனியார் நிறுவன பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து, அதில் இருந்த மண் சாலையில் கொட்டியது.

21 பேர் படுகாயம்

மேலும், பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ் டிரைவர் காண்டீபன் மற்றும் அதில் இருந்த எல்லப்பநாயுடுபேட்டையை சேர்ந்த வினோத்(28), திருத்தணியை சேர்ந்த விஜய்(22), லாரி டிரைவர் பூபாலன் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பஸ் டிரைவர் காண்டீபன், லாரி டிரைவர் பூபாலன், வினோத் ஆகிய 3 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

சம்பவ இடத்திற்கு மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சென்ற போலீசார் விபத்துக்குள்ளான லாரியையும், தனியார் நிறுவன பஸ்சையும் அப்புறப்படுத்தினார்கள்.

இந்த விபத்தால் திருவள்ளூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story