ஆறுமுகநேரியில் பரிதாபம் பச்சிளம் ஆண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை


ஆறுமுகநேரியில் பரிதாபம் பச்சிளம் ஆண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2017 2:00 AM IST (Updated: 31 Dec 2016 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– ஓய்வுபெற்ற தலையாரி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 62). ஓய்வு பெற்

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

ஓய்வுபெற்ற தலையாரி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 62). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு பாலசுந்தரி (27) உள்ளிட்ட 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகள் பாலசுந்தரிக்கும், பக்கத்து ஊரான ஆத்தூர் அருகே வெள்ளக்கோவிலை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

மாதவன், சென்னை வண்டலூரில் சொந்தமாக பாத்திரக்கடை நடத்தி வருகிறார். பாலசுந்தரி தன்னுடைய கணவருடன் சென்னை வண்டலூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் பாலசுந்தரி கருவுற்றார். அவர் தலைபிரசவத்துக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகநேரியில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு வந்தார்.

மனநலம் பாதித்ததால்...

கடந்த 19–ந்தேதி ஆறுமுகநேரி தனியார் ஆஸ்பத்திரியில் பாலசுந்தரிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பாலசுந்தரிக்கு சற்று மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. அவரை கடந்த 27–ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாதவனும் தன்னுடைய மனைவி, குழந்தையை பார்த்து விட்டு சென்னைக்கு திரும்பி சென்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பாலசுந்தரி, தனது பிரசவத்துக்காக அதிக பணம் செலவாகி விட்டதாக புலம்பியவாறு இருந்தார். ஆனால் அதனை அவருடைய குடும்பத்தினர் யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கினர்.

குழந்தையுடன் அமர்ந்து தீக்குளிப்பு

அதிகாலை 3 மணி அளவில் பாலசுந்தரி தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு, வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையின் அருகில் அமர்ந்து, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். குழந்தையின் உடலில் தீப்பிடித்ததும் அலறி துடித்தது. உடனே கண் விழித்த குடும்பத்தினர் விரைந்து சென்று பாலசுந்தரியையும், குழந்தையையும் காப்பாற்றி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே பச்சிளம் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பலத்த காயம் அடைந்த பாலசுந்தரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண், பச்சிளம் ஆண் குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்ததால், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story