மானாமதுரை அருகே கருகிய பயிர்களை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சாவு


மானாமதுரை அருகே  கருகிய பயிர்களை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 31 Dec 2016 11:00 PM GMT (Updated: 2016-12-31T18:38:22+05:30)

மானாமதுரை அருகே கருகிய பயிர்களை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்துபோனார். விவசாயிகள் உயிரிழப்பு தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால், விளை நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனையும் மிஞ்சும் சோதனை வி‌ஷயமா

மானாமதுரை,

மானாமதுரை அருகே கருகிய பயிர்களை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்துபோனார்.

விவசாயிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால், விளை நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனையும் மிஞ்சும் சோதனை வி‌ஷயமாக, கருகிய பயிர்களை கண்டு விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியடைந்து உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் என்று 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒரு சோக சம்பவமாக மானாமதுரையில் ஒரு விவசாயி இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–

மனவேதனை

மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது 45). விவசாயியான இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஒரு காலத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்ததால், இவர் விவசாயத்தையே சார்ந்து இருந்துவந்தார். எனினும் அவ்வவ்போது பருவமழை ஏமாற்றினாலும் விவசாயத்தை நம்பியே குடும்பத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே முற்றிலும் பருவமழை பொய்த்துபோனது. இதனால் கருப்பையா மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில் இந்த ஆண்டாவது பருவமழை கைக்கொடுக்கும் என்று கருப்பையா, தனது நிலத்தில் பயிர்களை விளைவித்தார். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனதால் கண்மாய்கள், ஊருணிகள், கிணறுகள் வறண்டுபோய் பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் மனவேதனை அடைந்த கருப்பையா, பயிர் கருகியது குறித்து நண்பர்கள், உறவினர்களிடம் வருத்தத்துடன் கூறி வந்துள்ளார்.

சாவு

இந்தநிலையில் நேற்று தனது வயலுக்கு சென்ற அவர், வயல் பரப்பிலேயே மயங்கி விழுந்தார். அப்போது தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த விவசாயி இறந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்துபோன கருப்பையாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.


Next Story