புழலில், நடுரோட்டில் ரசாயன பொடி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது


புழலில், நடுரோட்டில் ரசாயன பொடி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-05T01:30:40+05:30)

ரசாயன பொடி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று புழல் கேம்ப் அருகே கொல்கத்தா–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

செங்குன்றம்,

ரசாயன பொடி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று புழல் கேம்ப் அருகே கொல்கத்தா–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

பெட்ரோலை சுத்தப்படுத்தும் ரசாயன பொடியை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று திருவள்ளூரில் இருந்து அம்பத்தூர் வழியாக சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது லாரியை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் மாரியப்பன்(வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் புழல் கேம்ப் அருகே வளைவில் திரும்பும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மாரியப்பன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. காலை 7 மணிக்கு பிறகு சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரி, ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி கவிழ்ந்தது அதிகாலை நேரம் என்பதால் புழல் கேம்ப் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story