700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது


700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை  புத்தக  கண்காட்சி நாளை  தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Jan 2017 11:15 PM GMT (Updated: 4 Jan 2017 8:04 PM GMT)

சென்னை அமைந்தகரையில் 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி நாளை முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

சென்னை அமைந்தகரையில் 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி நாளை முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் காந்தி கண்ணதாசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

புத்தக கண்காட்சி

40–வது சென்னை புத்தக கண்காட்சி இந்த ஆண்டு 700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகள், கோடிக்கணக்கான புத்தகங்கள் என்று வாசகர்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்கும் வகையில் சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 19–ந்தேதி வரை நடைபெற உள்ளது.

வாகனம் நிறுத்துவதற்கான வசதி, உணவகங்கள், மருத்துவ வசதிகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.50 மற்றும் ரூ.100 டோக்கன்

சில்லரை தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க டெபிட், கிரெடிட் கார்டுகளின் மூலம் மொத்தமாக பணம் செலுத்திவிட்டு அல்லது ரொக்கமாக ரூ.500, ரூ.2,000 செலுத்திவிட்டு அதற்கு நிகரான மதிப்புள்ள ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்புள்ள டோக்கன்களை பெற்றுக்கொண்டு புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த வருடம் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதிகமானவர்கள் புத்தகங்கள் வாங்குவார்கள் என்பதால் எல்லா அரங்குகளிலும் ‘சுவைப்’ எந்திரங்களை பயன்படுத்தி பணம் இல்லா பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஏ.டி.எம். எந்திரமும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் நிறுவப்பட உள்ளது. 4 பேர், 2 பேர் மற்றும் தனி நபர் என 3 பிரிவுகளில் சீசன் நுழைவுச்சீட்டு பெறும் வகையில் செல்போன் ‘அப்ளிகே‌ஷன்’ ஒன்றையும் வடிவமைத்துள்ளோம்.

ரூ.20 கோடி

புத்தக கண்காட்சியை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார். 9 முதல் 10 லட்சம் பேர் வருவார்கள் என்றும், ரூ.20 கோடி வரையிலும் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பொதுச்செயலாளர் கே.எஸ்.புகழேந்தி, பொருளாளர் ஜி.ஒளிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story