சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது


சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:51 PM GMT)

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது

சேலம்,

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

வறட்சியால் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் கணக்கெடுப்பது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சவுந்தரராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சம்பத் கூறியதாவது:- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழக அரசு உத்தரவின்பேரில் சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்சேதம் கணக்கெடுக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. இந்த பணி மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மைத்துறை அலுவலர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சரியான முறையில் கணக்கீடு

மாவட்டத்தில் இப்பணியை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் விவசாய நிலங்களின் அளவினை சரியான முறையில் கணக்கீடு செய்வதன் அவசியத்தை எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. தளஆய்வு செய்யப்படும் பயிர்சேத புலத்தினை புகைப்படம் எடுத்திடவும், அதனை ஆவணமாக பதிவுசெய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பும் முறைகள் குறித்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் தங்கள் பணியினை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story