பள்ளிகொண்டா அருகே பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல்; பெண் பலி 2 சிறுமிகள் உள்பட 11 பேர் படுகாயம்


பள்ளிகொண்டா அருகே பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல்; பெண் பலி 2 சிறுமிகள் உள்பட 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:00 PM GMT (Updated: 4 Jan 2017 8:51 PM GMT)

பள்ளிகொண்டா அருகே பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதல்; பெண் பலி 2 சிறுமிகள் உள்பட 11 பேர் படுகாயம்

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அருகே பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்தில் பெண் பலி

பெங்களூரு மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த 11 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு வேனில் திரும்பி வந்தனர். வேனை, மகாத்மா காந்தி நகரை சேர்ந்த சுதாகர் (வயது 28) என்பவர் ஓட்டினார்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த இறைவன்காடு காட்டுகொல்லை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் திடீரென வேன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த வெங்கடேசன் என்பவரது மனைவி லட்சுமி (55) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

11 பேர் படுகாயம்

மேலும் இந்த விபத்தில் ராமச்சந்திரன் மனைவி லதா (36), சித்தேகவுடா மனைவி மம்தா (40), திம்மையா மனைவி மதிமா (42), வெங்கடேசலு மனைவி மஞ்சுளா (35), அவரது மகள் வீனஸ்ரீ (13), வேன் டிரைவர் சுதாகர், வெங்கடகிரி மகள் ஆகாஷ்கவுடா (6), தொட்டைய்யா மனைவி குண்டம்மா (75), பலராமன் மனைவி கலாவதி (40), நடேசகவுடா மனைவி ஜெயம்மாள் (40), சுரிஸ் மனைவி தனலட்சுமி (40) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story