திருமயம் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய 15 நாள் அவகாசம்


திருமயம் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய 15 நாள் அவகாசம்
x
தினத்தந்தி 4 Jan 2017 10:45 PM GMT (Updated: 4 Jan 2017 8:53 PM GMT)

திருமயம் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய 15 நாள் அவகாசம்

திருமயம்,

திருமயம் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணி போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. மேலும் எதிர்ப்பு தெரிவித்த விசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

சமாதானக் கூட்டம்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணயம் மூலம் திருமயத்திலிருந்து மானாமதுரை வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைப்பெற்று வந்தது. அதில் ஒரு பகுதியாக துலையானூர் கிராம எல்லையில் ஆபத்தான 3 வளைவுகள் இருந்தன. அதற்கு மாற்று சாலை அமைக்கும் முடிவு செய்து பட்டா நிலங்களுக்குள் சாலை அமைக்க பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுடையை விவசாய நிலங்களும் வீடுகளும் இடிபடுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இது குறித்து திருமயம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் அம்ரீத் முன்பாக சமாதானக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் தீர்வு ஏற்படவில்லை.

விரிவாக்கம் செய்யும் பணி

இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர் அம்ரீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், பொன்னமராவதி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் முத்துடையான் ஆகியோர் முன்னிலை சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது.

நெல் அறுவடை

இதையடுத்து பொதுமக்கள் பலர் உதவி கலெக்டர் அம்ரீத்திடம், மாற்றுப்பாதையில் சாலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணி தொடங்கினால் கதிர் சேதம் அடையும் என கூறினர். அதற்கு அதிகாரிகள் சாலை மாற்றுப்பாதையில் அமைக்கும் சூழ்நிலை இல்லாத காரணத்தினால் இந்த பாதை வழியாக தான் சாலையமைக்கும் பணி நடைபெற உள்ளது எனவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் கேட்டு கொண்டனர்.

மாற்றுப்பாதையில்

மேலும் கதிர் அறுவடை செய்யவும், வீடுகளை காலி செய்யவும் 15 நாள் அவகாசமும் மற்றும் விவசாய நிலங்களுக்கான தொகையும், வீடுகள் இடிபடுபவர்களுக்கு மாற்று இடமும், மேலும் அதற்கு உண்டான தொகையும் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மானாமதுரை செல்லும் அனைத்து பஸ்களையும் மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.


Next Story