திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 5 Jan 2017 4:51 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமல

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அண்ணாமலையாரை காண பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமியன்று பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.

கொடியேற்றம்

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. காலை 7.50 மணி அளவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மேள, தாளங்கள் முழங்க தங்ககொடி மரம் அருகே எழுந்தருளினர்.

அதைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத காலை 8 மணி அளவில் அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றபட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர். இதில் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி உற்சவம்

தொடர்ந்து 10 நாட்கள் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரர் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி தினமும் காலை, மாலை வேளைகளில் மாடவீதியில் உலா வருவார். 10–வது நாளான தை மாதம் முதல் நாள் வருகிற 14–ந் தேதி தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவு பெறும்.


Next Story