தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,07,507 பேர் ஆண்களை விட 21 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம்


தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14,07,507 பேர் ஆண்களை விட 21 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-05T23:48:19+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்கா ளர்கள் 14,07, 507 பேர் உள்ளனர். ஆண்களை விட 21 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்கா ளர்கள் 14,07, 507 பேர் உள்ளனர். ஆண்களை விட 21 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கி வாக்காளர் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராசய்யா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமி, அ.தி.மு.க. சந்தனம், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் ராஜா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். அனைத்து கட்சியினருக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ரவிகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

46 ஆயிரம் மனுக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 01-09-16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. இதில் 01-01-17 தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 737 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 760 மனுக்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

புதிய வாக்காளர்கள்

இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக 13 ஆயிரத்து 902 ஆண்கள், 16 ஆயிரத்து 14 பெண்கள், 17 திருநங்கைகள் ஆக மொத்தம் 29 ஆயிரத்து 933 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறி சென்றவர்கள் மொத்தம் 2 ஆயிரத்து 123 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 1,586 பேருக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் 8 ஆயிரத்து 429 பேருக்கு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

தொகுதி வாரியாக...

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 270 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 151 வாக்காளர்களும், திருச்செந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 714 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 677 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 911 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 784 வாக்காளர்களும் உள்ளனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 93 ஆயிரத்து 149 ஆண்கள், 7 லட்சத்து 14 ஆயிரத்து 276 பெண்கள், 82 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 7 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 21 ஆயிரத்து 127 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான வருகிற 25-ந் தேதி வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரால், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ராணுவத்தினர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாங்கள் குடியிருக்கும் பகுதியில் பொது வாக்காளர்களாக சேர தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

1,562 வாக்கு சாவடிகள்

விளாத்திகுளம் தொகுதியில் 258 வாக்குச்சாவடிகளும், தூத்துக்குடியில் 274 வாக்குச்சாவடிகளும், திருச்செந்தூரில் 253 வாக்குச்சாவடிகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 253 வாக்குச்சாவடிகளும், ஓட்டப்பிடாரத்தில் 252 வாக்குச்சாவடிகளும், கோவில்பட்டியில் 272 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தமடி 1,562 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன, என அவர் தெரிவித்தார்.

மாநகராட்சியில்...

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சியில் ஆணையாளர் ராஜாமணி தூத்துக்குடி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டார்.

Next Story