தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு தொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 5 Jan 2017 9:15 PM GMT (Updated: 2017-01-06T00:21:50+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் கூறியதாவது:-

58 கிராமங்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு சராசரி மழையை விட 450 மில்லி மீட்டர் குறைவாக பெய்து உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் வருவாய் நிர்வாக ஆணையர் கானொலி காட்சி மூலம் கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வயல்களில் நிலவியல் பயிர் ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். இதற்காக 58 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு குழு அனுப்பப்பட்டு உள்ளது. இக்குழுவினர் ஆய்வு பணியை தொடங்கி உள்ளனர். ஒரு பயிருக்கு 5 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி 15 பயிர்களுக்கு ஆய்வு நடக்கிறது.

கணக்கெடுப்பு பணி

ஆய்வு மேற்கொள்ளும்போது, பயிர்கள் சேதம் தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அறிந்து கொள்ள முடியும். இந்த புள்ளிவிவரங்களுடன் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. வருகிற 7-ந் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்படும். 9-ந் தேதி அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அதே நேரத்தில் அனைத்து கிராமங்களிலும் பயிர் சேதம் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது.

பயிர் காப்பீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சச்து 61 ஆயிரத்து 265 எக்டர் பரப்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. பயிர் காப்பீடு திட்டத்தில் வாழை, மிளகாய், வெங்காயம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் வாழை பயிரிடப்படும் 249 கிராமங்கள், மிளகாய் பயிரிடப்படும் 305 கிராமங்கள், வெங்காயம் பயிரிடப்படும் 205 கிராமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்த பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் விரைந்து பயிர் காப்பீடு செய்யலாம்.

அமைச்சர் ஆய்வு

மாவட்டத்தில் வறட்சி கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை செயலாளரும், மேலாண்மை இயக்குனருமான திரேஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் விரைவில் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். ஆகையால் விவசாயிகள் பயிர் சேதம் குறித்த ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு...

மேலும் மாவட்டம் முழுவதும் 19 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு கூடுதலாக 500 கிலோ நிலவேம்பு சிறப்பு ஒதுக்கீடாக பெறப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தற்போது 3 எம்.ஜி.டி. தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீர், தொழிற்சாலை குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் குடிநீருக்கும், தூத்துக்குடி அனல்மின்நிலையத்துக்கு மட்டும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் மேலும் குறையும் போது தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்வது நிறுத்தப்படலாம், என தெரிவித்தார்.

Next Story