புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தயாராக வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்


புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தயாராக வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:11:25+05:30)

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தயாராக வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவை சார்பில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது.

இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. கல்வித்துறை செயலாளர் அருண் தேசாய் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கண்காட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் 6-வது முறையாக நடக்கிறது. மாணவ, மாணவிகள் இளம் பருவத்திலேயே விஞ்ஞானத்தில் கவனம் செலுத்த இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்

சிலருக்கு தொழில் நுட்பத்திலும், மின்சார உற்பத்தியிலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் இருக்கும். இந்திய அரசு விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதுவை பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி செலவில் பேட்டரி குறித்த ஆராய்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன். இந்தியாவில் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

நமது மாநில மாணவர் களும் வெளிமாநிலங்களுக்கு சென்று இதுபோன்ற கண்காட்சிகளில் கலந்துகொண்டு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். புதிய தொழிற்கொள்கையில் ஆராய்ச்சி தொடர்பான தொழிற்சாலைகளுக்கு அதிக மானியம் தருவதாக கூறியுள்ளோம்.

சளைத்தவர்கள் அல்ல

நான் பிரதமர் அலுவலக மத்திய மந்திரியாக இருந்தபோது இஸ்ரோ மற்றும் அணு ஆராய்ச்சி தொடர்பானவற்றை பார்த்துள்ளேன். விஞ்ஞானம் மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஒரே ராக்கெட் மூலம் 14 செயற்கை கோள்களை அனுப்பும் வழியை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கும் செயற்கைகோளை அனுப்பியுள்ளனர்.

நமது விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ரஷியாவின் தயாரிப்பான கிரையோஜெனிக் என்ஜினை நமது நாட்டிலேயே தயாரித்தார்கள். நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக இணை இயக்குனர் மதனகோபால், புதுவை பள்ளிக்கல்வி இயக்குனர் குமார், இணை இயக்குனர் கிருஷ்ணராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

250 படைப்புகள்

இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் குழுக்களாக தயார் செய்த 15 படைப்புகளும், ஆசிரியர்களின் 15 படைப்புகளும் என்ற அடிப்படையில் 5 மாநிலங்களில் இருந்து மொத்தம் 250 அறிவியல் படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன.

இந்த அறிவியல் கண்காட்சியை அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை பார்வையிடலாம்.

Next Story