சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சில் கிடந்த ‘மர்ம’ அட்டைப்பெட்டி வெடிகுண்டு பீதியால் பரபரப்பு


சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சில் கிடந்த ‘மர்ம’ அட்டைப்பெட்டி வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2017 8:42 PM GMT (Updated: 2017-01-06T02:12:14+05:30)

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சில் கிடந்த ‘மர்ம’ அட்டைப்பெட்டி வெடிகுண்டு பீதியால் பரபரப்பு

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சில் ‘மர்ம’ அட்டைப்பெட்டி கிடந்தது. வெடிகுண்டு பீதியால் பரபரப்பு ஏற்பட்டது.

அட்டைப்பெட்டி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணத்துக்கு தினமும் இரவு 10.30 மணிக்கு ஒரு அரசு பஸ் சென்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த பஸ் கும்பகோணம் செல்வதற்காக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த பஸ்சில் பயணம் செய்ய சுமார் 25 பேர் ஏறி அமர்ந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கண்டக்டர் பஸ்சில் ஏறி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் அட்டைப்பெட்டி ஒன்று கிடந்ததை பார்த்தார். இதனால் கண்டக்டர் அந்த அட்டைப்பெட்டிக்கு (லக்கேஜ்) டிக்கெட் போடுவதற்காக அது யாருடையது? என்று விசாரித்தார். அதற்கு எந்த பயணிகளிடம் இருந்தும் பதில் வரவில்லை. மேலும் அந்த பெட்டியில் இருந்து ஒரு ஒயர் வெளியே தெரிந்தது.

வெடிகுண்டு பீதி

இதனால் அந்த ‘மர்ம’ அட்டைப்பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே இதுகுறித்து பஸ் கண்டக்டர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த ‘மர்ம’ அட்டைப்பெட்டியை நைசாக வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்தனர்.

அப்போது அதில் சின்ன பொம்மையும், ஒயரும் தனித்தனியாக இருந்தது. வேறு எதுவும் இல்லை. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். யாரோ மர்மநபர்கள் பயணிகளை பயமுறுத்த பஸ்சின் இருக்கைக்கு அடியில் அட்டைப்பெட்டியை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. அந்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் டிக்கெட் எடுத்த பயணிகள் வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு பீதியால் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story