சரக்கு-சேவை வரி விதிப்புக்கு பிறகு பொருட்களின் விலை குறையும் மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் தகவல்


சரக்கு-சேவை வரி விதிப்புக்கு பிறகு பொருட்களின் விலை குறையும் மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-06T02:12:48+05:30)

சரக்கு-சேவை வரி விதிப்புக்கு பிறகு பொருட்களின் விலை குறையும் மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் தகவல்

ஈரோடு,

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு பின்னர் பொருட்களின் விலை குறையும் என்று மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் பி.தனசேகரன் கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கு

ஈரோடு சிறுதொழில்கள் சங்கம் (ஈடிசியா) மற்றும் ஈரோடு மத்திய கலால்வரித்துறை சார்பில் தொழில் மற்றும் வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஈ.டி.சி.யா. அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈ.டி.சி.யா. தலைவர் கே.வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் பி.தனசேகரன் கலந்து கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்துக்கு நாட்டு மக்களையும், வணிகர்களையும் உற்பத்தியாளர்களையும் தயார் செய்யும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், சேவை நிறுவனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் முன்பு செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொழில் மற்றும் வணிகர்கள் ஜி.எஸ்.டி. நெட் என்கிற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் மூலம் உங்களுக்கு உரிய ரகசிய குறியீட்டு எண் மற்றும் பயனீட்டாளர் பெயர் வழங்கப்படும். இதுவரை வணிகர்கள், உற்பத்தியாளர்கள், சேவை பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தனித்தனியாக சுமார் 6 விதமான வரிகள் வரை செலுத்த வேண்டியது இருக்கும். இதில் சிலர் மத்திய கலால், வணிகவரித்துறை, மதிப்பு கூடுதல் வரிகளும், சிலர் அனைத்து வகையான வரிகளும் செலுத்தி வந்திருப்பார்கள். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டால் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு மட்டும்தான் இருக்கும்.

விலை குறையும்

ஜி.எஸ்.டி. வரியானது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி என்ற 3 நிலையில் பிரிக்கப்படும். உற்பத்தியாளர் முதல் கடைசி வியாபாரி வரை இந்த வரியானது ஒருவர் பின் ஒருவர் பயன்படுத்தும்படியான வசதி உள்ளது. எனவே ஒரு முறை வரி செலுத்தப்பட்ட பின்னர், தொடர்ந்து மற்றவர்கள் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. இதனால் செலுத்தப்பட்ட வரிக்கு கூடுதல் வரி செலுத்தும் கட்டாயம் இருக்காது. இதனால் பொருட்களின் விலை குறையும். அதுமட்டுமின்றி எந்த பொருளாக இருந்தாலும் நாடு முழுவதும் ஒரே விலையில் கிடைக்கும். ஒரே வரி, ஒரே விலை என்ற நிலை வரும்போது, வரி ஏய்ப்புக்காக வேறு மாநிலங்களில் இருந்து பொருட்களை முறைகேடாக வாங்கி வந்து சந்தையில் விற்பனை செய்யும் நிலை மாறும்.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான விற்பனை செய்யும் வியாபாரிகள், சேவை நிறுவனத்தினர், உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு உள் வருகிறார்கள். எனவே அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வாறு ஈரோடு மத்திய கலால் வரித்துறை துணை ஆணையர் பி.தனசேகரன் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ஜோ பால் மாம்பிள்ளி, கண்காணிப்பாளர்கள் எஸ்.பாஸ்கரன், ஏ.கண்ணதாசன், எம்.மகேந்திரன், என்.நவுஷத் ஆகியோர் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழி முறைகள், படிவங்கள் சமர்ப்பிக்கும் முறைகள், கட்டணம் செலுத்தும் வழிகள், வரி பிடித்தம் மற்றும் தொடர் பயன்பாடு ஆகியவை குறித்து விளக்கி கூறினார்கள். வணிகர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் அதிகாரிகள் பதில் அளித்தனர்.

இதில் ஈ.டி.சி.யா. முன்னாள் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை மத்திய கலால் வரித்துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைத்து நடத்தினார்.


Next Story