மயிலாடுதுறையில் தந்தை அடித்துக் கொலை 2-வது திருமணம் செய்து வைக்காததால் காவலாளி வெறிச்செயல்


மயிலாடுதுறையில் தந்தை அடித்துக் கொலை 2-வது திருமணம் செய்து வைக்காததால் காவலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:13:48+05:30)

மயிலாடுதுறையில் தந்தை அடித்துக் கொலை 2-வது திருமணம் செய்து வைக்காததால் காவலாளி வெறிச்செயல்

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் 2-வது திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்துக் கொலை செய்த காவலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தகராறு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை செட்டித் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது60). இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். இவருடைய மகன் தமிழ்வாணன்(40). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. தமிழ்வாணனிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தமிழ்வாணன் தந்தை பார்த்தசாரதியிடம் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

அடித்துக் கொலை

இந்த நிலையில் நேற்று காலை தமிழ்வாணன் தந்தை பார்த்தசாரதியிடம் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தமிழ்வாணன் வீட்டில் இருந்து மர கட்டையால் பார்த்தசாரதியை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை யடுத்து தமிழ்வாணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பார்த்தசாரதியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தமிழ்வாணனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story