தக்கலை அருகே பள்ளி வேன்– மணல் லாரி மோதல்; 3–ம் வகுப்பு மாணவன் படுகாயம்


தக்கலை அருகே பள்ளி வேன்– மணல் லாரி மோதல்; 3–ம் வகுப்பு மாணவன் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2017 11:00 PM GMT (Updated: 2017-01-06T02:15:59+05:30)

தக்கலை அருகே பள்ளி வேன்– மணல் லாரி மோதல்; 3–ம் வகுப்பு மாணவன் படுகாயம்

திருவட்டார்,

தக்கலை அருகே பள்ளி வேன்– மணல் லாரி மோதியதில் 3–ம் வகுப்பு மாணவன் படுகாயம் அடைந்தான்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:–

பள்ளி வேன்

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள  மாமூட்டுக்கடையில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு பள்ளியாடி, கருங்கல், திப்பிரமலை பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளி வேனில் வகுப்புக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை கருங்கல், திப்பிரமலை பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பள்ளி வேன் மாமூட்டுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தது. வேனில் சுமார் 30–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இருந்தனர்.

மணல் லாரி மோதியது

அந்த வேன் நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளியாடி பழையக்கடை பகுதியில் சென்ற போது எதிரே மணல் ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளிவேனும், மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. வேனில் இருந்த மாணவ–மாணவிகள் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் நின்றவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் வேனில் இருந்த திப்பிரமலையை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவன் கிஷோர் (வயது 7) படுகாயம் அடைந்தான். அவனை பொதுமக்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வேன் டிரைவர் மற்றும் பிற மாணவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story