கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-09T01:29:40+05:30)

கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

கரூர் ரெங்கநாதசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 29-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பகல் பத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் சாமிக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

பின்னர் சொர்க்கவாசல் வழியாக நம்பெருமாள் கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் வந்தனர். தொடர்ந்து நேற்று முதல் ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது.

கடந்து வந்தனர்

புலியூர் அருகே உள்ள கோவில்பாளையத்தில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் நேற்று திருமஞ்சன வழிபாடும் பஜனை பக்தி பாடல்களுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு திருவாபரணங்கள் அணிவித்து, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து மூல ஸ்தானத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து கோவிலை வலம் வந்தார். இதையடுத்து பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக வந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குளித்தலை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய கோவில்களிலும் நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவ பெருமாள் சாமி சொர்க்கவாசல் வழியாக சென்ற பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொர்க்கவாசல் வழியாக சென்றனர்.

நீலமேகப்பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் வரிசையாக சென்று சிறப்பு அர்ச்சனைகள் செய்து மூலவர் மற்றும் உற்சவரை வழிபட்டனர். இதில் மூலவர் மற்றும் உற்சவ சாமிகள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மகா விஷ்ணு அலங்காரத்தில்...

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பெருமாள் மகா விஷ்ணு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் லாலாப்பேட்டை பாவநாராயணன் கோவில், கரூர் பண்டரிநாதன் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story