ராணிப்பேட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதல்; பெண் பலி நர்ஸ் படுகாயம்
ராணிப்பேட்டை அருகே வேகமாக வந்த கார் சாலை அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிய விபத்தில் சாலையோரத்தில் டீ குடித்து கொண்டிருந்த பெண் பரிதாபமாக இறந்தார். நர்ஸ் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
டீ குடித்துக் கொண்டிருந்தார்ராணிப்பேட்டையை அடுத்த மேட்டுத்தெங்கால் பகுதியை சேர்ந்தவர் கிளியம்மாள் (வயது 55), இவரது மகன் விஜயகுமார் (36). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் அவரது தாயார் கிளியம்மாளை ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை பெல் டவுன்ஷிப் அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டு இருவரும் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக எம்.பி.டி. சாலையில் வேகமாக வந்த கார் நிலை தடுமாறி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த முகுந்தராயபுரம் பகுதியை சேர்ந்த நர்சாக வேலை பார்க்கும் கல்பனா (30) என்பவர் மீது மோதியது. இதில் கல்பனாவுக்கு 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
பெண் பலிமேலும் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விஜயகுமார் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் ஆட்டோ நகர்ந்து சென்று சாலையோரத்தில் டீ குடித்து கொண்டிருந்த கிளியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறிது தூரம் தள்ளி நின்றிருந்த விஜயகுமார் விபத்தில் இருந்து தப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் சிட்டபெல்லாபூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (20) அவருடன் வந்த அசோக் (30) இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லேசான காயமடைந்த 2 பேரும் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த நர்ஸ் கல்பனா வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கிளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.