வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகை


வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 6:36 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

முன்விரோதம்

வேலூரை அடுத்த மேல்மொணவூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60), விவசாயி. இவருக்கு முத்தம்மாள் (55) என்ற மனைவியும், 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் கிருஷ்ணன், அவரது மனைவி முத்தம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

கிருஷ்ணனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெயவேலு (35) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி கிருஷ்ணனுக்கும், ஜெயவேலுவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயவேலு அவரது ஆதரவாளர்கள் 2 பேருடன் சேர்ந்து கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி முத்தம்மாளை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி

பதிலுக்கு கிருஷ்ணன் தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோதலில் காயமடைந்த கிருஷ்ணன், முத்தம்மாள் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த ஜெயவேலு ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணன், முத்தம்மாள் ஆகியோர் பூரண குணமடைந்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் டாக்டர்கள் வீட்டுக்கு (டிஸ்சார்ஜ் செய்து) அனுப்பினர். ஜெயவேலுவை வீட்டுக்கு அனுப்பவில்லை.

டீன் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் உறவினர்கள், நோய் முழுமையாக குணமடையாமல் ஏன் கிருஷ்ணன், முத்தம்மாளை ‘டிஸ்சார்ஜ்’ செய்தீர்கள். அவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள டீன் உஷாசதாசிவன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

மேலும் டீன் மற்றும் டாக்டர்களிடம், நலமுடன் இருக்கும் எதிர்தரப்பை சேர்ந்தவரை ஏன் ‘டிஸ்சார்ஜ்’ செய்யவில்லை. காயங்களுடன் இருக்கும் கிருஷ்ணனை மட்டும் ஏன் வீட்டுக்கு அனுப்பினீர்கள் எனக்கேட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

அப்போது டாக்டர்கள், ஜெயவேலு இன்று (நேற்று) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உங்கள் தரப்பை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story