சேலத்தில் மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ விற்பனைக்கு குவிப்பு


சேலத்தில் மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ விற்பனைக்கு குவிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 9:44 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ ஆகியவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

சேலம்,

மஞ்சள் குலை

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை(சனிக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீடுகள்தோறும் வாசலில் அதிகாலையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு அனைத்து வகையான காய்கறிகள், கரும்பு போன்றவை படைத்து வழிபடுவது வழக்கம்.

சேலம் மாநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கடை வீதியில் பொங்கல் வைப்பதற்கான மண்பானைகள், கரும்பு, மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூ மற்றும் பூஜை பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கடை வீதிக்கு கூட்டாத்துப்பட்டி, பழையூர், அனுப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வாகனம் மூலம் மஞ்சள் குலையை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

காப்புக்கட்டு பூ

இதை பொதுமக்கள் அனைவரும் வாங்கி சென்றனர். ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், கடை வீதி, செவ்வாய்பேட்டை மார்க்கெட், வின்சென்ட், ஏற்காடு சாலை போன்ற பகுதிகளில் ஆவாரம்பூ, பூலாம்பூ மற்றும் வேப்பிலை அடங்கிய காப்புக்கட்டு பூ விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கி சென்றனர். ஒரு கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது.

கரும்பு விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக சேலத்திற்கு வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர். ஒரு ஜோடி கரும்பு ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சேலம் கடைவீதி மற்றும் வின்சென்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் விதவிதமான வர்ணம் பூசிய மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை அன்று பெரும்பாலானோர் மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைப்பதால் மண்பானைகள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story