இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயன்பெற தொழிலாளர்களின் ஊதிய வரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்வு


இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயன்பெற தொழிலாளர்களின் ஊதிய வரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 10:48 PM IST)
t-max-icont-min-icon

இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயன்பெற தொழிலாளர்களின் மாத ஊதிய வரம்பு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மண்டல இயக்குனர் மணி தெரிவித்தார்.

வேலூர்,

விழிப்புணர்வு முகாம்

தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை பதிவு செய்தல், இ.எஸ்.ஐ. திட்டத்தின் பயன்கள், பங்களிப்புக்கான நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வேலுரில் உள்ள டார்லிங் ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. மண்டல இயக்குனர் பி.பி.மணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

1948–ம் ஆண்டு இ.எஸ்.ஐ. திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் ஆரம்பகாலத்தில் ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் வேலைபார்த்தால் பதிவு செய்யவேண்டும் என்றிருந்தது தற்போது 10 பேர் இருந்தாலும் பதிவு செய்யவேண்டும். இதன்படி இந்தியாவில் 2 கோடியே 13 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 26 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

ரூ.21 ஆயிரமாக உயர்வு

அதில் ஒரு குடும்பத்தில் 3 முதல் 4 நபர்கள் வீதம் இந்த திட்டத்தில் 1 கோடிபேர் பயனடைகிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் 214 கிளை மருத்துவ மனைகள், 10 மருத்துவமனைகள், 2 சிறப்பு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதுவரை ரூ.15 ஆயிரம் வரை ஊதியம்பெற்றுவந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுவந்தனர். தற்போது ஜனவரி 1–ந் தேதியில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த்தப்பட்டுள்ளது.

சில நிறுவனங்களில் 20 பேர் பணிபுரிந்தால் அவர்களில் 10 பேர் மட்டுமே இந்த திட்டத்தில் பதிவு செய்யப்படுகிறார்கள். அனைவரும் பதிவுசெய்யப்படவேண்டும். சில நிறுவனங்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளன. நிறுவனங்களை தொடங்கி 5 ஆண்டுகளாகி இருந்தாலும் தற்போது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை பதிவு செய்யாததற்கான காரணம்கேட்கப்படமாட்டாது.

12 லட்சம்பேரை சேர்க்க திட்டம்

இந்தியாவில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் அதிக நிறுவனங்கள் உள்ளன. 1000 பேர் இருந்தால் 700 பேருக்கு வங்கிமூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு பணமாக வழங்கப்படுகிறது. தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அனைவருக்கும் வங்கிமூலமே ஊதியம் வழங்க வேண்டியதிருப்பதால் அனைத்து தொழிலாளர்களையும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் இன்னும் 12 லட்சம் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து இங்கு முதல் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. தொழில்நிறுவனங்கள் அனைத்து தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவுசெய்யவேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

ரூ.20 கோடியில் 2 மருத்துவமனைகள்

இ.எஸ்.ஐ. திட்ட மாநில முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ் பேசுகையில் வேலூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய இடம் வசதியில்லை. டாக்டர்களும் பற்றாக்குறையாக இருக்கிறார்கள். 11 டாக்டர்கள் இருக்கவேண்டும், ஆனால் 5 பேர்தான் இருக்கிறார்கள். இந்த பணிக்கு யாரும் விரும்பி வருவதில்லை.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 30 படுக்கைகள் கொண்ட இரண்டு மருத்துவ மனைகள் கட்ட ரூ.20 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கட்டுவதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அனுமதிகிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

ஆதார் எண் இணைக்கவேண்டும்

தொழிலாளர்களை பதிவுசெய்வது குறித்து இ.எஸ்.ஐ. அலுவலர் டாக்டர் சுரேஷ் பேசுகையில் தொழிலாளர்களை பதிவுசெய்ய ஒரு நிறுவனத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் இருக்கவேண்டும். ரூ.21 ஆயிரத்திற்கு குறைவாக ஊதியம்பெற வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம்பெறலாம். இந்த திட்டத்தில் நோய்க்கால பயன்கள், உடல் ஊனத்திற்கான பயன்கள், சார்ந்திருப்போருகக்கான பயன்கள், மகப்பேறுக்கான பயன்கள், மருத்துவ பயன்கள் என 5 வகையான பயன்கள் வழங்கப்படுகிறது.

இ.எஸ்.ஐ. திட்டத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும். ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் இந்த திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று கூறினார்.

நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுகந்தி, வேலூர் கிளை மேலாளர் பிரேமா மற்றும் டார்லிங் குரூப் நிறுவனங்களின் தலைவர் வெங்கடசுப்பு உள்பட தொழில்நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story