6½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது


6½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 லட்சத்து 53 ஆயிரத்து 753 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது

கலசபாக்கம்,

பொங்கல் பரிசு பொருட்கள்

கலசபாக்கம் ஒன்றியம் வில்வாரணி கிராமத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மேல்வில்வராயநல்லூர், மேலாரணி, செங்கபுத்தேரி, எள்ளுப்பாறை, எலத்தூர், மோட்டூர், சோழவரம், பூவாம்பட்டு உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

6½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு...

பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை தொடர்ந்து பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பொங்கல் பரிசு பொருட்களில் தற்போது கூடுதலாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 53 ஆயிரத்து 753 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வரை 73 சதவீதம் குடும்ப அட்டையில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 27 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் அட்டை பெற்றவர்கள் உடனே தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில கூட்டுறவு சங்க தலைவர் அமுதா, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் நைனாக்கண்ணு, வேளாண்மை விற்பனை சங்க தலைவர் துரை, ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு, ஜெயப்பிரகாஷ், தேவராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தருமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, பில்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கலமக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story