ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி, கண்களில் கருப்புத்துணி கட்டி காளைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்ககோரி, கண்களில் கருப்புத்துணி கட்டி காளைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபால்பட்டி,
கண்களில் கருப்புத்துணி கட்டி...திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பில்லமநாயக்கன்பட்டி, கொசவப்பட்டி, புகையிலைபட்டி, மறவப்பட்டி உள்பட 13 ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த ஊர்களை சேர்ந்த மக்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கொசவப்பட்டியை சேர்ந்த மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். இந்தநிலையில் திண்டுக்கல் அருகேயுள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நூதன போராட்டம் நடத்தினர்.
இதற்காக ஊரின் மையப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் அவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுடைய கண்களில் கருப்பு துணியை கட்டியதோடு, காளைகளின் கொம்பிலும் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாவட்ட செயலாளர் சின்னையா கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதனால் எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடைபெறவில்லை. மத்திய, மாநில அரசுகள் மீது மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறோம். சட்டத்தையும் நீதிமன்ற உத்தரவையும் மதிக்கிறோம். எனவே, தமிழர்களின் ஒட்டுமொத்த கலாசார திருவிழாவாக நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.
புகையிலைபட்டிஇதேபோல் சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைபட்டி புனித செபஸ்தியார் கோவில் முன்பு கருப்புத்துணி கட்டி காளைகளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுமக்கள் தங்களது கண்களிலும், காளைகளின் கொம்பிலும் கருப்பு துணியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து புகையிலைபட்டி ஊர் நாட்டாமை தோமையார் கூறும்போது பொங்கல் பண்டிகை மற்றும் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு புகையிலைபட்டியில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்த முடியவில்லை. இதனால் எங்கள் ஊர் திருவிழா களை இழந்து விட்டது. இதனை தெய்வ குற்றமாக நாங்கள் நினைக்கிறோம். தற்போது ஏற்பட்ட வறட்சிக்கும், விவசாய பாதிப்புக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததே காரணம் என்று கருதுகிறோம். எனவே ஜல்லிக்கட்டினை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம்ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.