பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பானைகளை உடைத்து போராட்டம்
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பானைகளை உடைத்து போராட்டம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே திருவாமூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகாலனியில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக காலனி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் மின்விளக்குகளும் எறியதில்லை. சின்னகாலனியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும், தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இது தொடர்பாகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பானை உடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பகத்சிங் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பானைகளை உடைத்து போராட்டம்இதில் கலந்து கொண்ட சின்னகாலனியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் கொண்டு வந்த மண்பாணைகளை தரையில் போட்டு உடைத்தும், பிளாஸ்டிக் குடங்களை தரையில் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சின்னகாலனியில் குடிநீருக்கு நிரந்தர தீர்வு காணவும், தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.