பாரத மாதா கோவில்–ராமாயண தரிசன சித்திர கண்காட்சி நரேந்திரமோடி திறந்து வைத்தார்


பாரத மாதா கோவில்–ராமாயண தரிசன சித்திர கண்காட்சி நரேந்திரமோடி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை நேற்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி,

பாரதமாதா கோவில்


கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய நந்தவனம் போன்று காட்சிதரும் பசும்புல்வெளிகள் மற்றும் பூந்தோட்டங்களுக்கு இடையே அமைதி தவழும் கோவிலாக காட்சி தரும் இக்கட்டிடத்தின் முகப்பில் ராமபிரானுக்கு பெரிதும் உதவியாக இருந்த வீர அனுமானின் 27 அடி உயர (27 நட்சத்திரங்களை குறிப்பிடும் வகையில்) கருங்கல் சிலை அமைந்துள்ளது.

தரைதளத்தில் ராமாயண காவியத்தின் 108 முக்கிய சம்பவங்களின் மூலிகை ஓவியங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட பாரதத்தாயின் 15 அடி உயர சிலை காண்போர் வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அனந்தபத்மநாபர் சயனக்கோலத்தில் காட்சி தரும் புடைப்புச் சிற்பம், கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறை மீது பகவதி அம்மன் தவக்கோலத்தில் காட்சி தருவதைப்போன்ற புடைப்புச்சிற்பம், தியான நிலையில் சுவாமி விவேகானந்தர், நடனக்கோலத்தில் நடராஜர் போன்ற புடைப்புச் சிற்பங்கள், பல்வேறு ஓவியங்கள், சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடே ஆகியோரைப்பற்றிய ஒளி– ஒலி காட்சிகளை திரையிட வசதியாக 150 பேர் அமரும் வகையிலான நவீன திரையரங்கு போன்றவை அமைந்துள்ளன. ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்துக்கு வெளியே நீரூற்றுகளுக்கு மத்தியில் 32 அடி உயரத்தில் அமர்ந்து தவம் செய்யும்நிலையில் காட்சிதரும் சிவபெருமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்தார்


சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம் மற்றும் பாரத மாதா சதனத்தின் திறப்பு விழா நேற்று மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் நடந்தது. திறப்பு விழா பூதப்பாண்டி பி.கே.குமார் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விவேகானந்த கேந்திரா ஆயுட்கால பெண் ஊழியர் ராதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பாரதமாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் தமிழில் சில வார்த்தைகளை பேசினார். வணக்கம், தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன்


விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீர அனுமன் சிலை முன் மின்விளக்கேற்றி மலர் அஞ்சலி செலுத்தினார். ராமாயண கதை குருஜி ஸ்ரீமத் மொராரி பாபுஜி, ராமர் பாதம் முன் திருவிளக்கு ஏற்றி புஷ்பாஞ்சலி செய்தார். விழாவுக்கு விவேகானந்த கேந்திர தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கி பாரத மாதா கோவிலில் திருவிளக்கு ஏற்றி வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும், வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைத்தன்யானந்தாஜி, விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடே உருவப்படத்தை திறந்து வைத்தார்.

பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை குளச்சலை சேர்ந்த எஸ்.சி.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாக இயக்குனர் முருகேசன் வடிவமைத்து கட்டினார். ஓவியங்களை சென்னையை சேர்ந்த சிற்பி பாஸ்கரதாஸ், வீர அனுமன் சிலையை காரைக்குடியை சேர்ந்த ஸ்தபதி தட்சிணாமூர்த்தி வடிவமைத்துள்ளனர்.

கலந்து கொண்டவர்கள்


விழாவில் துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொது செயலாளர் பானுதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், இணை பொதுச்செயலாளர் பிரவின் தபோல்கர், தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர், மூத்த ஆயுட்கால ஊழியர் விவேகவாணி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீபத்மநாபன், வளாக மேலாளர் பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆபிரகாம் லிங்கன், பாரத மாதா கோவில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் மின் விளக்கு அலங்காரம் செய்த ராமகிருஷ்ணன், சிற்பி பாஸ்கரதாஸ், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, என்.சி.கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாக இயக்குனர் முருகேசன், மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்துகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகிகள் தர்மபுரம் கணேசன், ஆர்.ஆர்.முருகேஷ், வளையாபதி திரிசுயம்பு, மீனாதேவ், தொழில் அதிபர் விநாயகமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story