பல்லாவரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை


பல்லாவரத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 13 Jan 2017 12:00 AM GMT (Updated: 12 Jan 2017 9:31 PM GMT)

பல்லாவரத்தில் இரும்பு கடைக்குள் புகுந்து அ.தி.மு.க. பிரமுகர் மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

அ.தி.மு.க. பிரமுகர்

சென்னையை அடுத்த பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அபுசாலி (வயது 34). இவர், பல்லாவரம் நகர அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளராக இருந்துவந்தார். இவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அபுசாலி பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணியில் திருநீர்மலை சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று மதியம் வழக்கம்போல் அவர் கடையில் இருந்தார். கடையின் உள் பகுதியில் 5 ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கடையின் முன்பகுதியில் அபுசாலி அமர்ந்து இருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்தபடி 3 பேரும், முகத்தை துணியால் மூடியபடி ஒருவரும் என மர்மநபர்கள் 4 பேர் அவரது கடைக்குள் புகுந்தனர். அவர்கள் தங்கள் கையில் பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மநபர்கள் கடையில் அமர்ந்து இருந்த அபுசாலியை சரமாரியாக வெட்டினர். அவர் தடுக்க முயன்றதால் அவரது கைகளில் வெட்டு விழுந்தது. இதில் அவரது 2 கைகளும் துண்டானது. பின்னர் மர்மநபர்கள் அபுசாலியின் கழுத்து, தலை, மார்பு உள்பட உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த அபுசாலி அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொலை நடைபெற்ற கடை முன்பு அபுசாலியின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டனர்.

2 இடங்களில் மறியல்

சம்பவ இடத்துக்கு தென்சென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்தனர். போலீசார் அபுசாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அப்போது கொலையாளிகளை கைது செய்யக்கோரி அந்த பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்லாவரம்–திருநீர்மலை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.

இரும்பு வியாபாரிகளை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி கிண்டி காந்தி மார்க்கெட் இரும்பு வியாபாரிகள், கிண்டி அனைத்து வியாபாரிகள் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமது பிலால் தலைமையில் கிண்டி அண்ணா சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரங்கிமலை, கிண்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

கேமராவில் பதிவானது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் தாங்கள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு காரில் தப்பிச் சென்றதாக தெரிகிறது. அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வருவது, அபுசாலியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

உறவினர் கடத்தல்

கடந்த மாதம் அபுசாலியின் சித்தப்பாவான கிண்டியை சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது அலி என்பவரை ரூ.2 கோடி பணம் கேட்டு நெல்லையை சேர்ந்த பிரபல தாதா ரபீக் என்பவர் கடத்தினார். இதுதொடர்பாக போலீசார் ரபீக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை தாதா ரபீக், கிண்டி உள்பட சென்னையில் பல இடங்களில் வியாபாரிகளை மிரட்டி பல ஆண்டுகளாக பணம் பறித்துவந்தது தெரியவந்தது. முகமது அலி கடத்தப்பட்டபோது அபுசாலி தான் அவரை போலீசில் புகார் செய்ய வைத்து, ரபீக்கை கைது செய்ய வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

நெல்லை தாதா காரணமா?

எனவே ரபீக் கைதானதற்கு அபுசாலி தான் முக்கிய காரணமாக இருந்தார் என்பதால், வியாபாரிகளிடம் தன் மீது பயத்தை ஏற்படுத்துவதற்காக ரபீக் தான் சிறையில் இருந்தபடியே அபுசாலியை தீர்த்துக்கட்டிவிட்டதாக அபுசாலியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

போலீசார் கூறும்போது, ‘‘அபுசாலியின் கொலைக்கான காரணம் தெரியவில்லை. நெல்லை தாதா ரபீக் தான் கொலைக்கு காரணமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுதான் காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்’’ என்றனர்.


Next Story