தஞ்சையில் நாளை தொடங்குகிறது: தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடக்கிறது


தஞ்சையில் நாளை தொடங்குகிறது: தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 13 Jan 2017 3:45 AM IST (Updated: 13 Jan 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

தஞ்சாவூர்,

பொங்கல் திருவிழா

தஞ்சை தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 16–ந்தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு கல்யாணபுரம் கே.ஜி. குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிக்கு புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்குகிறார். ராமர்இளங்கோ வரவேற்றுப்பேசுகிறார். விழாவை தென் இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் செர்ஜி கோட்தோ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். விழாவில் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக உதவி ரஷ்யதூதர் எவ்கேனிக்ராப்சென்கோ, அகமத்ப்ரா‌ஷர்ஆசாம்பின், மலேசிய தூதர் அப்துல்ஜலீல், சிங்கப்பூர் துணை பிரதமரின் கிளை செயலாளர் ஜோஸ்வாகுமா, லண்டன் டாக்டர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து சுர்ஜித்குழுவினரின் பரதநாட்டியமும், இரவு 8 மணிக்கு ரஷ்ய நாட்டு கலைக்குழுவினர் வழங்கும் பாலே நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பட்டிமன்றம்

நாளை மறுநாள் 2–வது நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஆத்மநாதன் குழுவினர் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் வழங்கும் வாழ்க்கை இனிய பூந்தோட்டமா? நெடிய போராட்டமா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மதி கலைக்குழுவினரின் தப்பாட்டமும், மாலை 4 மணிக்கு கவிஞர் பரதன் தலைமையிலான நாற்காலிகள் பேசுகின்றன என்ற தலைப்பில் கவியரங்கமும், மாலை 6 மணிக்கு தயா குழுவினர் வழங்கும் மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு பிரியா குழுவினர் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஓ.வி.எம். நடன குழுவினர் வழங்கும் வேலுநாச்சியார் தமிழர் மண்ணின் வீரவரலாறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பாட்டுமன்றம்

நிறைவு நாளான 16–ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வெள்ளைபாண்டி குழுவினர் வழங்கும் தேவராட்டமும், காலை 10 மணிக்கு கருத்தரங்கமும் மதியம் 3 மணிக்கு சுர்ஜித் கலைக்குழுவினர் வழங்கும் நாட்டுப்புற ஆடல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தொலைக்காட்சி புகழ் ரேவதி வழங்கும் மக்களின் மனம் கவர்ந்த பாடல்கள், காதல் குடும்ப பாடல்களா? சமுதாய தத்துவ பாடல்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பாட்டுமன்றமும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு புதியபார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்குகிறார். விவசாயிகள் சங்க தலைவர் சின்னசாமி முன்னிலை வகிக்கிறார். விழாவில் மலேசிய கல்வி அமைச்சர் கமல்நாதன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசிஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். முடிவில் பேராசிரியர் பாரி நன்றி கூறுகிறார். இரவு 9 மணிக்கு லஷ்மன் சுருதி குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story