தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வருகிற கல்விஆண்டு முதல் தீ தடுப்பு மேலாண்மை குறித்த பட்டயபடிப்பு அறிமுகம்


தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வருகிற கல்விஆண்டு முதல் தீ தடுப்பு மேலாண்மை குறித்த பட்டயபடிப்பு அறிமுகம்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:05 AM IST (Updated: 13 Jan 2017 4:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வி ஆண்டு முதல் தீ தடுப்பு மேலாண்மை குறித்த பட்டயபடிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று துணைவேந்தர் பாஸ்கரன் கூறினார்.

தஞ்சாவூர்,

துணைவேந்தர் பேட்டி

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உலக அளவிலான யோகா மாநாடு வருகிற மார்ச் மாதம் 10, 11 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மலேசிய நாட்டில் உள்ள திரிபீடம், ஹாங்காங் யுவாயோக மந்திரம் அறக்கட்டளை, பெங்களூரு பாபாஜி கிரியா யோகா அமைப்பு, ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு பிரம்மகுமாரிகள் இயக்கம், பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரமம் ஆகிய அமைப்புகள் பங்கேற்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, மொரிசீயஸ், அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பல்வேறு அறிஞர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் காலை, மாலை 2 வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கரிகால்சோழன் விருது

தமிழ்ப்பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பில் 2007–ம் ஆண்டு முதல் கரிகால்சோழன் விருது வழங்கப்பட்டு வருகிறது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் ஆண்டுதோறும் வெளிவரும் தமிழ்ப்படைப்புகளை ஆராய்ந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை இதுவரை 14 பேர் பெற்றுள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டு முதல் இந்த விருது 3 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மலேசியாவில் இருந்து வெளிவந்த தொல்காப்பிய கடலின் ஒரு துளி என்ற நூலினை எழுதிய சீனிநைனாமுகமதுவுக்கும், சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த மாறிலிகள் சிறுகதை தொகுப்பினை எழுதிய சித்துராஜ்பொன்ராஜூக்கும், இலங்கையில் இருந்து வெளிவந்த பஞ்சம் பிழைக்க வந்த சீமை என்ற நாவலை எழுதிய சிவலிங்கத்திற்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பட்டயபடிப்பு அறிமுகம்

தமிழ்ப்பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மூலம் வருகிற கல்வி ஆண்டு முதல் (ஜூன்மாதம்) தீ தடுப்பு மேலாண்மை குறித்த பட்டயபடிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் வாழும் அயல்நாட்டு தமிழர்கள் தமிழை கற்பிக்க வாய்ப்புகள் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு தமிழ்ப்பல்கலைக்கழகம் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது. ‘‘மழலை தமிழ்’’ என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய செயலி வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று தொடங்கப்படுகிறது. இதில் குழந்தைகள் தமிழை எழுதுவது, உச்சரிப்பது போன்றவை படக்காட்சிகளுடன் இடம் பெற்று இருக்கும். இதனை இணையதளத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் 2 டாலர் செலவிலும், இந்தியாவில் உள்ளவர்கள் ரூ.100 கட்டணத்திலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக தமிழ்பண்பாட்டு கலாசார கல்வி வருகிற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் இசை, நாட்டியம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனை கற்பவர்களுக்கு, இங்குள்ள பேராசிரியர்கள் அங்கு சென்று தேர்வு நடத்தி சான்றிதழ்களை வழங்குவார்கள்.

ஒருமாணவர் ஒரு மரம் நடும் திட்டம்

தமிழக கவர்னரின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு மாணவர் ஒருமரம் நடும் திட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இந்த மாதத்தில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் அவரவர்களின் துறை வளாகத்தில் ஒரு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அந்த மரக்கன்றுகளில் அந்த மாணவரின் பெயர், அவர் படிக்கும் பிரிவு போன்ற பலகையும் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பதிவாளர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தார்.


Next Story