தஞ்சை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு முல்லை, மல்லிகைப்பூ கிலோ ரூ.1500–க்கு விற்பனை


தஞ்சை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு முல்லை, மல்லிகைப்பூ கிலோ ரூ.1500–க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2017 4:13 AM IST (Updated: 13 Jan 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முல்லை, மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. விவசாயிகள் பொங்கல் பண்டிகை அன்று புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கரும்பு, மஞ்சள்கொத்து, வாழைப்பழம் தான். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி வழிபடுவதற்காக பூக்களும் அதிக அளவில் மக்கள் வாங்குவார்கள்.

இதனால் பூக்கள் விற்பனையும் அதிக அளவில் இருக்கும். தஞ்சை பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பூக்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலையும் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300–க்கு விற்பனை செய்த மல்லிகைப்பூ, முல்லைப்பூ நேற்று ரூ.1,500–க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடும் விலை உயர்வு

தஞ்சை மார்க்கெட்டிற்கு தற்போது மதுரையில் இருந்து தான் மல்லிகைப்பூ விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. வழக்கமாக திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் தற்போது திருச்சியில் இருந்து பூக்கள் வரத்து இல்லை. இதனால் மல்லிகைப்பூ, முல்லைப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தஞ்சை பூ மார்க்கெட்டில் நேற்று செவ்வந்திப்பூ கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500–க்கும், முல்லைப்பூ ரூ.1,500–க்கும், அரளி பூ ரூ.250–க்கும், ஜாதிப்பூ ரூ.800–க்கும், ரோஜா ரூ.200–க்கும், காட்டுமல்லி ரூ.600–க்கும் விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக காணப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வரத்து குறைவு

இது குறித்து பூ மொத்த வியாபாரி சூசைஅடைக்கலராஜ் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக பூக்களின் விலை அதிகமாக இருக்கும். தற்போது மல்லிகைப்பூ வரத்து குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை இந்த விலை உயர்வு இருக்கும். அதன் பின்னர் திருச்சி பகுதியில் இருந்து மல்லிகைப்பூ வரத்து அதிக அளவில் இருக்கும். அதனால் விலை வெகுவாக குறைந்த விடும்’’என்றார்.



Next Story