மாநகராட்சி தேர்தலையொட்டி மும்பையில் 13 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது
மாநகராட்சி தேர்தலையொட்டி மும்பை முழுவதும் 13 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
மும்பை,
மும்பை மாநகராட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 21–ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு ஆகியவற்றை கொடுப்பதை கண்காணிக்க மும்பை முழுவதும் தற்காலிகமாக 13 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணி, பிரசாரக்கூட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும். இதுதவிர வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சி ரூ.6 கோடியே 37 லட்சம் செலவு செய்கிறது.
விளம்பர செலவுஇது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் பி.ஜி.பவார் கூறும்போது, ‘தேர்தல் கமிஷனரின் உத்தரவின் பேரின் மும்பை முழுவதும் 13 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 13 ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கை தான், அதில் ஒன்றுமில்லை’ என்றார்.
இதேப்போல வாக்காளர்களிடம் ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வு பிரசாரம், விளம்பரத்திற்காக மாநகராட்சி ரூ.24 லட்சம் செலவு செய்கிறது. கடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் வெறும் 57.5 சதவீதம் தான் வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது.