புதுகும்மிடிப்பூண்டியில் பன்றி காய்ச்சல் பரவுகிறதா? அமைச்சர் ஆய்வு


புதுகும்மிடிப்பூண்டியில் பன்றி காய்ச்சல் பரவுகிறதா? அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jan 2017 5:27 AM IST (Updated: 13 Jan 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

புதுகும்மிடிப்பூண்டியில் பன்றி காய்ச்சல் ஒருவருக்கு கண்டறியப்பட்ட நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.

கும்மிடிப்பூண்டி,

ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள இருளர் காலனியில் ஏற்பட்ட மர்ம காய்ச்சல் காரணமாக ஏற்கனவே ஒரு பெண் உள்பட மொத்தம் 3 பேர் இறந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அனைவரையும் கிராம ஊராட்சி சேவை மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 7 பேரும், எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 12 பேரும் என இருளர் காலனியை சேர்ந்த மொத்தம் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சம்பவ இடத்திற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பன்றி காய்ச்சல்

இங்கு 13 குடும்பங்களை சேர்ந்த 56 பேருக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. யாருக்கும் பீதி அடையக்கூடிய எந்த ஒரு நிகழ்வும் இங்கு இல்லை. காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு மட்டும் எச்.1 என்.1 பாசிட்டிவ் (பன்றி காய்ச்சல்) உள்ளது. அவரும் நலமாக உள்ளார். அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நோய் தடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நோய் தொற்று வருவதற்கான எந்த வித வாய்ப்பும் அறவே இல்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி மற்றும் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 28 ஆயிரத்து 208 பேர் உள்ளனர். மாவட்ட கலெக்டர் மூலமாக அவர்கள் அனைவருக்குமே இந்த மருத்துவ பரிசோதனை செய்திட நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 200 பேருக்கு முதல்கட்ட பரிசோதனை நடந்து முடிந்து உள்ளது. அதில் 21 பேருக்கு சாதாரண காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story