கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை


கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jan 2017 5:27 AM IST (Updated: 13 Jan 2017 5:27 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கடந்த மாதத்திற்கு உரிய அரசு உதவி பணம் தற்போது தான் வழங்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கடந்த மாதத்திற்கு உரிய அரசு உதவி பணம் தற்போது தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார்தா புயல் பாதிப்பில் முகாமில் உள்ள பெரும்பாலான வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் முகாம் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முகாமில் உள்ள 141 குடும்பத்தினருக்கு மட்டும் தலா ரூ.4 ஆயிரத்து 100 வார்தா புயல் பாதிப்புக்காக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. முகாமில் மேற்கண்ட நிவாரண உதவியை வழங்கும்போது உண்மை நிலையை கண்டறிந்து முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முகாமை சேர்ந்த பெண்கள் 200 பேர் நேற்று காலை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் போராட்டம் குறித்த தங்களது கருத்துகளை அதிகாரிகள் யாரும் கேட்க முன்வரவில்லை என புகார் கூறி மாலையில் அவர்கள் அங்கிருந்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை– கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதையறிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தாசில்தார் ஐவண்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கை தொடர்பான மனுக்களை அவரிடம் முகாம் பெண்கள் அளித்தனர். முறையான ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் ஐவண்ணன் கூறினார். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story