எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் வரை குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி


எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் வரை குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 14 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 6:41 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் வரை குண்டும்குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிஅடைந்து வருகின்றனர்.

தொண்டி,

பள்ளங்கள்

திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து ஓரியூர், வெள்ளையபுரம், புலியூர் வழியாக திருவாடானை செல்லும் சாலை மாவட்டத்தின் முக்கிய சாலையாகும். இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இதில் எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் விலக்கு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை பள்ளங்களும், குண்டும் குழிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் தினமும் பயணம் செய்யும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள் என பல தரப்பட்டவர்களும் விபத்துகளில் சிக்கி காயமடைவதுடன் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தசாலையை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து இந்தபகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை இந்தசாலை செப்பனிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து வெள்ளையபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரக்கத்தலி கூறியதாவது:– எஸ்.பி.பட்டினம் திருவாடானை சாலையில் எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் விலக்கு வரை ஏராளமான இடங்களில் சாலை பழுதடைந்து உள்ளது. சரிவர பராமரிக்கப்படாததால் இந்த சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.

இந்த சாலை புதுக்கோட்டை மாவட்டத்தையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் சாலையாகும். மேலும் தமிழகத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலம், பாசிபட்டினம் மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா, திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் ஆலயங்களுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவதால் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாகவும் இருந்து வருகிறது.

சீரமைக்க வேண்டும்

மேலும் ஓரியூர், திருப்புனவாசல், எஸ்.பி.பட்டினம் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இந்த சாலையில்தான் ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் சென்று வருகின்றனர். இதேபோல் 100–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையில்தான் தங்களது அன்றாட பணிகளுக்காக சென்று வர வேண்டிஉள்ளது. ஆனால் இந்த சாலை நீண்ட காலமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக உருமாறி போய் விட்டது.

சாலையின் அவசியத்தை சம்பந்தப்பட்டதுறை ஆதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சீரமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் சாலை இதுநாள் வரை சீரமைக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு சாலையை தற்காலிகமாக செப்பனிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு உருமாறி போய் விட்டது. இதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி எஸ்.பி.பட்டினம் முதல் கட்டிவயல் வரை புதிய சாலை அமைத்து தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story