பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் இன்று அதிகாலையில் நடைதிறப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படு
திருச்செந்தூர்,
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது.
அதிகாலையில் நடைதிறப்புமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
தீர்த்தவாரிகாலையில் தை மாத உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை பரிவேட்டைநாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது.
மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.
பக்தர்கள் குவிந்தனர்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை, காவி நிற ஆடை அணிந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் பாத யாத்திரை பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு வந்தனர். ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்தனர்.
நீண்ட வரிசையில்...பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.