தமிழகத்தில் 148 சாலை பணிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


தமிழகத்தில் 148 சாலை பணிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:45 AM IST (Updated: 13 Jan 2017 10:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 148 சாலை பணிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி, ஜன.14–

தமிழகத்தில் 148 சாலை பணிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது கூறியதாவது:–

547 நாட்களில் முடிந்தது

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்த பிறகு, சாலை போக்குவரத்து துறையை இரட்டிப்பு பலம் பொருந்தியதாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு மத்திய மந்திரி நிதின் கட்கரி செயல்பட்டு வருகிறார். அதன் பயனாக தான் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு 2015–ம் ஆண்டு ஜூலை 17–ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பாலம் 547 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

நரிக்குளத்தில் பாலம் கட்டுவதற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. உடனடியாக அந்த பணியும் தொடங்கப்பட்டு 1½ ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இதுதவிர சுசீந்திரத்தை சுற்றி வரக்கூடிய வகையில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி ரூ.24½ கோடி செலவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப்பணியும் கூடிய விரைவில் முடிக்கப்படும்.

148 சாலைப்பணிகளுக்கு அங்கீகாரம்

மத்திய அரசின் நிதியில் இருந்து தமிழ்நாட்டில் மொத்தம் 78 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் 48 சாலைப்பணிகள் நடைபெறுகிறது. இதில் 40 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் 148 சாலை பணிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதுதவிர இன்னும் 50 சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். அதற்கான அங்கீகாரமும் விரைவில் வர இருக்கிறது.

மாநிலங்கள் இடைய இருக்கும் சாலைகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி முதல் பழைய உச்சக்கடை இடையே ரூ.68 கோடி செலவில் சாலைபணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் ஆகிய 2 மேம்பாலப்பணிகளுக்கு ரூ.307 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மார்த்தாண்டத்தில் மேம்பாலம் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இந்த பணி முடிந்து திறப்பு விழா நடைபெறும். பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.

மேம்பாலம்

இதே போல் கோட்டாரில் இருந்து செட்டிகுளம் வழியாக கலெக்டர் அலுவலகம் சந்திப்பு வரை 3.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. வடசேரி–ஒழுகினசேரி இடையே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. தக்கலையிலும் மேம்பாலம் அமைக்கப்படும். இவை அனைத்துக்கும் அங்கீகாரம் பெறப்பட்டு விட்டன.

குமரி–கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் நான் கேட்கிறேன். மாநில சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் 12 திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

9 மாநில சாலைகள்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,038 கி.மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 3,341 கி.மீட்டர் சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், 1,697 கி.மீட்டர் சாலைகள் தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை துறை அலகினாலும் பராமரிக்கப்படுகிறது. மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சரகம் மூலம் இதுவரை 902 கி.மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர மேலும் மொத்தம் 432.60 கி.மீட்டர் நீளமுள்ள 9 மாநில சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மத்திய மந்திரி நிதின்கட்கரியால் அறிவிக்கப்பட உள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம்–பவானி சாலை 80 கி.மீட்டர், அவினாசி–மேட்டுப்பாளையம் 38 கி.மீட்டர், பவானி–கரூர் சாலை 77 கி.மீட்டர், திருச்சி–நாமக்கல் சாலை 77 கி.மீட்டர், பழனி–தாராபுரம் 31 கி.மீட்டர், ஆற்காடு–திண்டிவனம் சாலை 20 கி.மீட்டர், அப்துல்லாபுரம்–அசனம்பட்டு–திருப்பத்தூர் சாலை 79 கி.மீட்டர், நெல்வாய்–பள்ளிகொண்டான் சாலை 19.60 கி.மீட்டர், வேலூர்–ஓசூர்சாலை 11 கி.மீட்டர் தூரம் ஆகும். இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6,500 கோடி ஆகும்.

மதுரையில் வெளிவட்ட சாலை 72 கி.மீட்டர் பணிக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) பாரத மாதா சதனம், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசிய 5–வது நிமிடத்தில் கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.27 கோடி நிதியை ஒதுக்கினார். விவேகானந்தர் பாறை–திருவள்ளுவர் சிலையை இணைப்பதற்காக மட்டும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

படகு போக்குவரத்து

திருவனந்தபுரம் கோவளம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரம், புதுச்சேரி வழியாக சென்னைக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்–கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளில் இந்த சாலைப்பணி முடிக்கப்படும். முட்டத்தில் இருக்கக்கூடிய கலங்கரை விளக்கத்தை மேம்படுத்தி மியூசியம் அமைக்க ரூ.2½ கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை புதிதாக கிழக்கு கடற்கரை சாலை அமைக்க ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளது.

50 ஆயிரம் கோடி

ஏ.வி.எம். கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. இங்கு கோரிக்கை வைத்தார். இந்தியாவில் உள்ள 101 நதிகளை தேசிய மயமாக்குவதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் ஏ.வி.எம். கால்வாயை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி மாவட்ட வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அது ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும். குளச்சல் துறைமுகம் ரூ.28 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த துறைமுகம் இந்தியாவின் நுழைவு வாயிலாக அமையும். இந்த திட்டம் அமைய அனைத்து மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை முடியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story