ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஈரோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி கோரி அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு,
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி கோரி அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள முன்னாள் படைவீரர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாநில துணை கொள்கைப்பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், அவைத்தலைவர் குமார் முருகேஸ், மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணியம், துணை செயலாளர் துசந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மூலப்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சார்பில் நேற்று ஜல்லிக்கட்டுக்கான தடையை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் கூடிய மாணவர்கள் காங்கேயம் இன காளையுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இடையன்காட்டு வலசு, சம்பத் நகர் வழியாக கொங்கு கலையரங்கு பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்தது. மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.