ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், குத்தாலம் அன்பழகன், ஜெகவீரபாண்டியன், வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குண்டாமணி என்கிற செல்வராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டதால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். தமிழர்களின் வீரம் காக்கும், மானம் காக்கும் ஜல்லிக்கட்டை நடத்த உடடினயாக அனுமதிக்க வேண்டும். தமிழர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்து, அதனை விசாரணை நடத்தி உடனே அனுமதி வழங்க கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், சத்தியேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் மூவலூர் மூர்த்தி, இளையபெருமாள், முசாகுதீன், சசிகுமார், தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பாளர் ஜெகமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீர்காழிஇதேபோல சீர்காழியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். நகர வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.ஆர். சிவசுப்பிரமணியன், நகர வர்த்தக நல சங்க கவுரவ தலைவர் கோவி.நடராஜன், பொறியாளர்கள் சிவகுரு, திருநாவுக்கரசு, பால்ராஜ்ரத்தினம், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி காசி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருமுத்து வரவேற்றார். இதில் பால்சாமி நாடார் அறக்கட்டளை நிறுவனர் ராமர், இந்து மக்கள் கட்சி மண்டல அமைப்பாளர் சாமிநாதன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க பொறுப்பாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கொள்ளிடம் முக்கூட்டில் இருந்து காளை மாடுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை அடைந்தனர். முடிவில் சுதாகரன் நன்றி கூறினார்.
நாகைநாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மதிவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், நாகை நகர செயலாளர் போலீஸ் பன்னீர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், தாமஸ் ஆல்வா எடிசன், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாகையில் 12–ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.